Sunday, October 24, 2010

டால்பின்


டெல்லி: இந்தியாவின் தேசிய நீர் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிதாகி வரும் இந்த விலங்கினத்தைக் காப்பாற்றும் நோக்கில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், தேசிய விலங்காக புலியும், தேசியப் பறவையாக மயிலும் உள்ளதைப் போல, டால்பின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறுகள், குறிப்பாக கங்கையின் ஆரோக்கியத்திற்கு டால்பின்களின் சேவை மிகப் பெரியது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.டால்பினை தேசிய நீர் விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ் குமார்தான் முன்வைத்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது என்றார்.

Friday, October 15, 2010

மழை

மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களில் அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு.

அணில்

இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும். சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும். இவற்றின் முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கும். அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை. கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும். தாவும்போது வால் இதற்குப் பாராசூட்டைப் போல் பேலன்ஸ் செய்து கொள்ள உதவுகிறது. கைகளில் உள்ள வளைந்த நகங்கள் விழாமல் இருக்க உதவுகின்றன. பறக்கும் அணில்களும் உண்டு. அவை இந்தியாவில் இல்லை.அணில் மரங்களிலும், வீடுகளிலும் மறைவான இடங்களில் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும். அணில்கள் குட்டி போட்டு தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. அணில்கள் தங்களுக்கு ஆபத்து வரும் போது பயங்கரமாக ஒலியெழுப்பி எதிரியின் கவனத்தைத் திசை திருப்பும்.

கூந்தல்


கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங் களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர்.இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது.கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளை பயன்படுத்தி சிலர் மேலும் முடிகளை இழக்கின்றனர்.முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால்தான் அநேக பேருக்கு முடி உதிர்கிறது.தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.சிலருக்கு இந்நோயின் தாக்கம் புருவத்திலும் ஏற்படுவதுண்டு. தலையை சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கு இந்நோய் பரவும் (குறிப்பாக காதில் கதவும்) இது உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். இந்த பொடுகை தடுக்காவிட்டால் தலைமுடி அனைத்தும் உதிர ஆரம்பிக்கும்.